Tuesday, June 21, 2011

The Best Advice I Ever Got

Courtesy: Dinamalar
அநேகமாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒன்றிரண்டு "டர்னிங் பாயின்ட்'களாவது நிச்சயம் இருக்கும்.
தினமும் ஒரேமாதிரி பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் யாராவது நமக்கு ஒரு நல்ல அறிவுரையைச் சொல்லியிருப்பார்கள். அதைப் பின்பற்றி நடந்தவுடன் நம்முடைய உலகமே தலைகீழாக மாறியிருக்கும். இல்லையா?
இந்த விஷயம் நமக்கு மட்டுமில்லை, பெரிய நட்சத்திரங்கள், பிரபலங்கள், வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் எல்லோருக்கும் பொருந்தும். அவர்களுடைய வெற்றிப் பயணத்தையும் ஒரு சின்ன அறிவுரை திசைமாற்றியிருக்கும்.
அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பிரபலம் கேட்டி கௌரிக். அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை, "இதுபோல் பல துறைகளில் பெரிய அளவில் ஜெயித்தவர்களைச் சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய அறிவுரை எது? ஏன்? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டால் எப்படி இருக்கும்?'
கேட்டியின் இந்த திடீர் சந்தேகம் ஒரு சுவாரஸ்யமான புத்தகமாக மலர்ந்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் "தி பெஸ்ட் அட்வைஸ் ஐ எவர் காட்'(The Best Advice I Ever Got). பில் கிளின்டன், காண்டலீஸா ரைஸ், இந்திரா நூயி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், சல்மான் ருஷ்டி, பில் கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ், மனோஜ் நைட் ஷ்யாமளன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்களுக்குக் கிடைத்த மிக நல்ல அறிவுரைகள், ஆலோசனைகள், அனுபவங்களை இதில் கொட்டியிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு, எந்தக் கட்டுரையும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களைத் தாண்டுவதில்லை. சின்னச் சின்ன டிப்ஸ்கள் சுலபமாக மனதில் பதிகின்றன, பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கின்றன.
பல பிரபலங்கள் வழங்கிய இந்த "பிராக்டிகல் அட்வைஸ் மழை'யிலிருந்து, உங்களுக்காகச் சில துளிகள் இங்கே:
* வாழ்க்கை என்பது சமையல் குறிப்பு அல்ல. இதற்குப் பிறகு இதைச் செய்யவேண்டும், இவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் யாரும் விதிமுறை போட்டுவைக்கவில்லை. நீங்கள் எந்தக் கட்டாயங்களையும் பின்பற்றவேண்டியதில்லை. ரிலாக்ஸ், ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவியுங்கள், வாழ்க்கையின்போக்கில் மிதந்து செல்லுங்கள்.
* உங்களுக்கு ஒரு விஷயம் தேவை என்றால் அதை நேரடியாகக் கேட்கத் தயங்காதீர்கள். அப்படிக் கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தால், கூச்சப்பட்டால் வேலை நடக்காது.
* நீங்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? ஏன்? இந்த விஷயத்தை நீங்களே கூர்மையாக ஆராய்ந்து பாருங்கள். அதனைத் தாண்டுங்கள்.
* அதற்காக, "நான் பயமே இல்லாமல் வாழ்வேன்' என்று ஆரம்பித்துவிடாதீர்கள். பயம் நல்லது. பல சமயங்களில் அதுதான் உங்களைச் சரியான பாதையில் நகர்த்திச்செல்கிறது.
* பிரச்சனைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள், அவை மாறுவேஷத்தில் வரும் வாய்ப்புகள்!
* முயற்சி தவறிவிட்டதா? சறுக்கிக் கீழே விழுந்துவிட்டீர்களா? தப்பில்லை, மறுபடி எழுந்து நிற்காவிட்டால்தான் தப்பு.
* எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? என்று புலம்பாதீர்கள். எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கிறது. டென்ஷனை விட்டு முன்னே போகிற வழியைத் தேடுங்கள்.
* எது சுலபமாக இருக்கிறதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியோ அதைச் செய்யுங்கள்.

-என். சொக்கன்

No comments:

Post a Comment